Thursday, 28 March 2013

காளான் தொழில்நுட்பம்


காளான் தொழில்நுட்பம்

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புரதம் நிறைந்த உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நவீன யுகத்தில் உள்ள பல்வேறுபட்ட மரபு சாரா புரதச்சத்துக்கான உணவுப் பொருள்களில் காளான் மூலம் கிடைக்கும் புரதச்சத்து வளர்ந்து வரும் மேலை நாடுகளில் சிறந்த புரதச்சத்து உணவாக கருதப்படுகின்றது. மேலும் காளான்களின் புரதம் மாற்றும் திறன், புரதம் உற்பத்தித் திறன், தாவரப் பயிர் வகை புரதம் மற்றும் விலங்கு புரதத்தினைவிட சிறந்து காணப்படுகிறது.


காளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் தன்மையற்றவையாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும். இக்காளான்களில் 90 சதவீதம் ஈரப்பதமும், அதிகளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதமும், அமினோ அமிலங்களும் மற்றும் நுண் ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.

தமிழகத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் வாயிலாக கோ.1, எம்.2, ஏ.பி.கே.1, எம்.டி.யு. மற்றும் ஊட்டி 1 போன்ற சிப்பிக் காளான் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது பால் காளான் (ஏ.பி.கே.2) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பூஞ்சான உணவுக் காளான்களில் உள்ள ஈரப்பதம் காரணமாக காய்கறி மற்றும் பழங்களை போன்று எளிதில் கெட்டுவிடும் தன்மையுடையது.

ஆதலால் அதை பதப்படுத்தி பாதுகாத்தல் அவசியமாகும். காளான்களை அறுவடைக்குப் பின் அவற்றின் தேவைக்கு ஏற்பட சேமித்து வைக்கும் முறைகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று குறுகிய கால சேமிப்பு, மற்றொன்று நீண்ட கால சேமிப்பு.

உலர் முறையில் பதப்படுத்துதல்:

காளான் உலர் முறையில் மிதவைப்படுகை முறை உலர்த்துதலில் உலர்த்தப்படும் பொருள் மிதவை நிலையில் இருப்பதால் ஈரப்பதம் எளிதில் நீக்கப்படுவதுடன் தரமும் பாதுகாக்கப்படுகிறது. இம்முறையில் காளானை உலர வைக்க ஒரு மிதவைப் படுகை உலர்த்தியை வேளாண் பல்கலைக்கழகம் வேளான் பதன்செய் துறையில் வடிவமைத்துள்ளது.

மிதவைப்படுகை உலர்த்தியில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிமிடத்துக்கு 35 மீ காற்று ஓட்டவீதத்தில் காளான்களை எளிதில் உலர்த்தலாம். இவ்வாறு உலர்த்தப்பட்ட காளானின் தரம் மேம்பட்டதாகவும் உள்ளது என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 12 சதவீத ஈரப்பதம் உள்ள நிலையில் காளான்களை காற்றுப் புகா வண்ணம் பெட்டிகளில் அடைத்து வைத்தால் குறைந்தது ஓராண்டுக்கு அவைகள் கெடாமல் இருக்கும். இந்த உலர்த்தியின் விலை ரூ.20 ஆயிரம்.

உறைய வைத்து பதப்படுத்துதல்:

பிளான்சிங் செய்யப்பட்ட காளான்களை பாலித்தின் பைகளில் நிரப்பி அவற்றை 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உறைய வைத்து பாதுகாக்கலாம். இம்முறையில் தரம் நீண்ட நாள்களுக்கு பாதுகாக்கப்பட்டாலும் இதற்கான செய்யப்படும் செலவு காரணமாக இம்முறையை பொதுவாக பின்பற்றப்படுவதில்லை.

உறைந்த பின் காயவைத்துப் பதப்படுத்துதல்:

இம்முறையில் காளான்களை 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைப்பதால் அதில் உள்ள நீரானது பனிக்கட்டிகளாக மாறி விடுகின்றது. பின்பு அவற்றை வெற்றிடத்துக்கு உட்படுத்துவதால் பனிக்கட்டிகள் பதங்கமாதல் முறையில் நீக்கப்படுகின்றது. இவ்வாறு நீக்கப்பட்ட காளான் ஈரப்பதம் 3 சதவீதமாக இருக்கும். இம்முறையில் உலர்த்த சுமார் 12-16 மணி நேரம் ஆகின்றது. இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காளானின் தரம் உயர்ந்ததாக இருக்கும்.

கதிரியக்கத்துக்குட்படுத்தி பாதுகாத்தல்:

காளானை கோபால்ட் - 50 என்றும் கதிரியக்கப் பொருளின் கதிரியக்கத்துக்கு உட்படுத்தி 15 டிகிரி செல்சியல் வெப்பநிலை மற்றும் 90 சதவீதம் ஈரப்பதத்தில் வைத்திருப்பதன் மூலம் சுமார் 12 முதல் 16 நாள்கள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்.

சவ்வூடு பரவல் முறையில் பதப்படுத்துதல்:

பொதுவாக உப்புக் கரைசலோ, சர்க்கரை கரைசலோ அல்லது இரண்டும் சேர்ந்த கரைசலோ சவ்வூடு கரைசலாக பயன்படுத்தப்படுகிறது. இச்சவ்வூடு கரைசலில் காளான்களை 30 நிமிடங்கள் வைத்திருப்பதால் அவற்றில் உள்ள ஈரப்பதம் 50 சதவீத அளவுக்கு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு ஈரப்பதம் குறைக்கப்பட்ட காளான்கள் வெப்பக் காற்றின் உதவியால் உலர்த்தப்பட வேண்டும்.

நிலையான வளி அழுத்த சூழலில் பாதுகாத்தல்:

இந்த முறையில் காளான் வைக்கப்பட்டிருக்கும் சூழலில் கரியமில வாயு மற்றும் பிராணவாயு அளவினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அவற்றின் சுவாசிக்கும் தன்மை பாதிக்கப்படுகின்றது, இவ்வாறு செய்வதன் மூலம் காளான்களை சேமித்து வைக்கும் காலம் அதிகரிப்படுவதுடன் காளான் பழுப்பு நிறமாவது தடுக்கப்படுகின்றது.

காளான் ஊறுகாய்:

காளானை ஊறுகாய் செய்து பாதுகாப்பது மூலம் நீண்ட நாள்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். இதற்குக் காளான்களை சுத்தமான நீரில் கழுவி உலர்த்த வேண்டும். சிறிதும் ஈரம் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் சுத்தமான மெல்லிய துணியால் மென்மையாக துடைத்து எடுக்கலாம். முந்திரி, ஜாதிப்பத்திரி, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றை வானலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு நல்லெண்ணெயைக் காய வைத்து அதில் காளான் துண்டுகளை இட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் வறுத்து பொடி செய்ததை காளானில் ருசிக்கேற்ப உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கலக்கி இறக்கி, சூடு ஆறிய பின் சுத்தமான ஈரமற்ற பாட்டில்களில் நிரப்பி பாதுகாக்கவும்.÷தற்போது பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் காளான் உற்பத்தி 7 மடங்காக பெருகியுள்ளது

Saturday, 16 March 2013

நெல்லிக்கனி


நெல்லிக்கனி 
Emblica officinalis
Phyllanthaceae


தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக் கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.
 
தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளைப் போக்குகிறது. இந்தியப் பெண்கள் பொதுவாக நெல்லிக்கனி அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.
 
காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப் போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 
கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.
 
ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Thursday, 14 March 2013

மகத்துவம் தரும் மஞ்சள்



மகத்துவம் தரும் மஞ்சள்

மஞ்சளை `ஏழைகளின் குங்குமப்பூ' அப்படின்னு அழைக்கிறாங்க. காரணம், அதிக விலைக்கு விற்கப்படும் குங்குமப்பூ தர்ற அதே பலன்களை, குறைஞ்ச விலையில கிடைக்கும் மஞ்சளும் தருகிறது. நம் இந்தியப் பண்பாட்டோட அடையாளமா மஞ்சளை குறிப்பிடுறாங்க. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது சிந்து சமவெளி நாகரிக காலத்துலேயே ஹரப்பா பகுதியில மஞ்சள் பயிரிடப்பட்டதா வரலாறுகள் உண்டு.
 
மங்கலப் பொருட்களில் மஞ்சள் முதலிடம் வகிக்குது. இந்தியப் பெண்கள் மஞ்சளை அதிக அளவுல பயன்படுத்துறாங்க. தோல் பிரச்சினை எது வந்தாலும் கிராமப்புற மக்கள் முதலில் தேடுவது மஞ்சளைத்தான்.
 
*மஞ்சளை யும், சந்தனத்தையும் கலந்து முகத்துல தடவி வந்தால் மினுமினுப்பு கூடும்; கரும்புள்ளி பிரச்சினையும் இருக்காது.
 
*அடிபட்ட காயங்கள்ல மஞ்சளைப் பூசினா, ரத்தம் கசிவது உடனே நிற்கும். சிராய்ப்புகள், கொப்புளங்கள், கட்டிகள் என எல்லாவற்றுக்குமே மஞ்சள் சிறந்த மருந்தாக அமையுது. நம்முடைய தினசரி சமையல்ல மஞ்சள் கட்டாய இடம்பெறும்.
 
மஞ்சளுக்கு, ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது. நம்மையும் அறியாம உணவு மூலமா கிருமிகளோ, அசுத்தங்களோ குடலுக்குள் போய்விட்டால், அவற்றை அழிக்கிற ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. கொலஸ்ட்ராலும், சோடியமும் மஞ்சள்ல குறைவா இருக்கு.
 
ஆனால், `வைட்டமின் சி' மற்றும் மக்னீசியம் தாது அதிகமா இருக்கு. மஞ்சளுக்கு புற்று நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கூட இருக்குறது ஆராய்ச்சியில கண்டு பிடிக்கப்பட்டிருக்கு. 

Sunday, 10 March 2013

கைப்பேசி


கைப்பேசி

நான் படித்து கொண்டு இருப்பது வனத்தை சார்ந்தப் படிப்பாக  இருந்தாலும், எனக்கு கைப்பேசி என்னும் மின்னனுப்பொருளின் மீது ஒரு மோகம். ஏனென்றால்  தற்காலத்தில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்ததால் அல்ல, அதன் விளைவுகளை உணர்ந்ததினால் ஏற்பட்டது அந்த மோகம். இன்றைய உலகில் இன்றியமையாத பொருளாக விளங்கும் இதனால் விளைவா? என்று ஆச்சரியப்படுவீர்கள்.ஆம் உள்ளது.இதோ என் கவலையை கவிதை நடையில்,

உள்ளங்கை அளவுள்ள கைப்பேசியே…!
காலத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் நீ
உலகின் கடவுள் ஆனாய்…!
உள்ளங்கை அளவுள்ள என் சிட்டுக்குருவிகள்
என்ன செய்தன உன்னை…
கடவுள் ஆன பிறகு ஏன் அதற்கு
பரிசளித்தாய் கல்லறையை….
உன் கதிர் அலைகள் கருவருத்தன
அந்த ஐந்தறிவின் உயிரை……..
உன்னால் பாதிப்பு அடைவது அவைகள் மட்டுமல்ல
இந்த ஆறறிவு உயிரும் தான்…
     மானிடா,
இன்று அதற்க்காக நான் எழுதுகிறேன்
நாளை நமக்காக யார் எழுதுவார்கள்… 
விழித்துக்கொள்….

Wednesday, 6 March 2013

கடுக்காய்


கடுக்காய்

Terminalia bellirica

Combretaceae
கடுக்காய்:
அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, எரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில் வாத-பித்த-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
பயன்கள் :
 
ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.
இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.
இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட நாள் வாழலாம். அதனால்தான் "காலையில் இஞ்சி... நண்பகல் சுக்கு... மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..''- என்று சித்த மருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை


மேற்குத் தொடர்ச்சி மலை

தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி, ஆனைமலை, பொதிகைமலை, கலக்காடு  போன்ற மலைப் பிரதேசங்கள், காடுகள், ஏரிகள், நதிகள்சதுப்பு நிலங்கள் போன்ற பல்வேறு விதமான இயற்கை வளங்கள் அடங்கிய மெற்கு தொடர்ச்சி மலை பல உயிரினங்கள் வாழ கரணமாக உள்ளது.
இந்த மலை தொடர் அண்மையில் உலகப் பரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த மலை தொடர் பல்வேறு வன உயிர்களுக்கு மட்டும் வழ்வாதாரமாக மட்டும் இல்லாமல் மனித வாழ்விற்கும் இன்றியமையாததாக உள்ளது.
அம்மலைதொடர் குஜராத் மாநிலத்தில் தொடங்கி இலங்கை வரை நீட்டிக்கிறது. எண்ணற்ற ஆறுகளுக்கு (நர்மதா,

தபதி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, காவேரி)  ஆதாரங்களாகவும் விளங்குகிறது. அத்தொடர் பல்லூயிர்ப்பெருக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தொடரில் ஈடு இனையற்ற செல்வங்கள் நிறைந்துள்ளது. அதாவது மரங்களாகவும், விலங்குகளாகவும் நிறைந்துள்ளது.

இதில் மருத்துவ குணமுள்ள மரங்களும், செடிகளும் அதிகம். இது பல பாலூட்டிகளுக்கும், பறவைகளுக்கும், ஊர்வனகளுக்கும் வாழ்விடமாக அமைந்துள்ளது.
தற்போது இத்தொடர் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள காடுகளையும், விலங்குகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Friday, 1 March 2013

யானை



யானை

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நிலவிலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
    ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.
யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்துவருகிறார்கள். இது மனிதர்களின் நலனுக்கும் யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. எடுத்துக்காட்டாக யானைகள் புதிய வேளாண்மைக் குடியேற்றங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்துவிடுவதுடன் மக்களுக்கு உயிராபத்தையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான முரண்பாடுகளால்இலங்கையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 150 யானைகளும், 100 மனிதர்களும் இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளதுகாடழிப்பு யானைகளின் வாழிடத்தையும் குறைக்கின்றது. ஆசிய யானைகளின் அழிவுக்கான முதன்மைக் காரணம் வாழிடங்கள் இழக்கப்படுவதே என்று கூறப்படுகிறது.
வழிடங்கள்:
யானைகள் வாழ்வதற்கு பெரிய அளவிலான காட்டுப்பகுதிகள் தேவைப்படுகின்றன. ஏனெனில், யானைகள் கூட்டமாக ஒரு பகுதிக்குள் புகுந்து மரங்களையும் செடி கொடிகளையும் பெருமளவில் அழித்து உண்கின்றன. பின்னர் வேறிடத்துக்குச் செல்கின்றன. இவ்வாறு புதிய இடங்களுக்குச் சென்று அழிக்கப்பட்ட காடுகள் மீண்டும் வளர்ந்ததும் திரும்பவும் அதே இடத்துக்கு வந்து உணவைப் பெறுகின்றன. வாழிடங்களின் அளவு குறையும் போது, மிக விரைவிலேயே உணவு முடிவடைந்து விடுகிறது.
பழமொழிகள்
·         யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
·         யானைக்கும் அடி சறுக்கும்.
·         யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்
·         யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
·         யானை கறுத்தாலும் ஆயிரம் பொன்.